சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதியன்று உலக எம்.ஜி.ஆர் பேரவை மாநாடு நடைபெறவிருப்பதாக இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் பிரான்ஸ் நாட்டின் எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவருமான முருக பத்மநாபன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும். மனிதநேய ஐ.ஏ.எஸ் அகாதெமியின் தலைவருமான சைதை துரைசாமி, வேல்ஸ் பல்கலை கழகத்தின் இணை வேந்தர் கலாநிதி ஐசரி கணேஷ், நடிகை லதா மற்றும் முருக பத்மநாபன் ஆகியோர் பங்குபற்றினர். 

இவ்விழாவில் பேசிய சைதை துரைசாமி,

‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்து முப்பது ஆண்டுகளாகியும் தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் வாழும் அவரது அபிமானிகள் இன்றும் எம்.ஜி.ஆருக்கு விழா எடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து மகிழ்கின்றனர். இன்று வரை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எம்.ஜி.ஆரின் புகழை பாடி வருகின்றனர். எம்.ஜி.ஆரை தங்கள் குடும்ப தலைவராக, வழிகாட்டியாக, குல தெய்வமாக மதித்து வணங்குகிறார்கள்.

இத்தகைய எம்.ஜி.ஆர் பக்தர்களை ஒருங்கிணைத்து கௌரவப்படுத்துவது அவரால் அடையாளம் காட்டப்பட்ட எங்களைப் போன்றவர்களின் கடமை. இதற்காக கடந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் உலக எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசியல் கலப்பின்றி முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் புகழ் பாடுவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். சமூக சேவையில் ஈடுபடும் ராமகிருஷ்ணா மடம், ரோற்றரி கிளப் போன்று உலக எம்.ஜி.ஆர் பேரவையும் பல்வேறு சமூக சேவைகளை வழங்கும்.

இந்த ஆண்டு இந்த பேரவையின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதன் போது உலக எம்.ஜி.ஆர் பேரவையின் பிரதிநிதிகள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக எம்முடைய தலைமையில் உயர்நிலை குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த குழுவில் வி.ஐ.டி பல்கலைகழக இணை வேந்தர் ஜி விஸ்வநாதன், வைத்தியர் எம்.ஜி.ஆர் பல்கலைகழக கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ஏ.சி. சண்முகம், வேல்ஸ் பல்கலைகழக இணை வேந்தர் கலாநிதி ஐசரி கணேஷ், ஆம். எம். கே கல்வி நிறுவன குழுமத்தின் தலைவர் ஆர் எஸ் முனிரத்னம், மறைந்த இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ், வின்ஸ் கிறித்துவ பொறியியல் கல்லூரியின் தலைவர் நாஞ்சில் வின்சென்ட், சத்யபாமா பல்கலைகழக நிர்வாக இயக்குநர் மரியஜினா, நடிகை கலையரசு லதா, தமிழ் பல்கலை கழக பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஜுலை 15 ஆம் திகதியன்று காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலை கழக திறந்த வெளி அரங்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோஹித் சிறப்பு அதிதியாக பங்குபற்றவிருக்கிறார்.

இந்த மாநாட்டில் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்க்கும் வகையிலான பட்டிமன்றம், கவியரங்கம், வாழ்த்தரங்கம், இன்னிசை நிகழ்ச்சி என பல சுவராசியமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதன் போது எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள், பணியாளர்கள், முக்கிய பிரபலங்கள் என பலர் பங்குபற்றுகிறார்கள்.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜோர்டான், மலேசியா, சிங்கப்பூர், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றுகிறார்கள்.’ என்றார்.

பின்னர் பேசிய ஐசரி கணேஷ்,

‘ இந்த நிகழ்வில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகமான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. அத்துடன் இதில் இலங்கையின் கல்வி துறையின் ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், மலேசிய நாட்டின் துணை பிரதமர் மொரீஷியஸ் நாட்டின் தலைவர் என பலரும் இந்த மாநாட்டில் பங்குபற்றவிருக்கிறார்கள்.’ என்றார்.