தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், சிறந்த குணசித்திர நடிகராகவும் அறியப்பட்ட தம்பி ராமையா, மணியார் குடும்பம் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

VU சினிமாஸ் என்ற நிறுவனம் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த தேன்மொழி சுங்குரா தயாரித்திருக்கும் திரைப்படம் மணியார் குடும்பம். இந்த படத்தில் உமாபதி, மிருதுளா தம்பி ராமையா, ராதாரவி, பவன்,விவேக் பிரசன்னா, யாஷிகா ஆனந்த், ஸ்ரீரஞ்சினி, ஜெயபிரகாஷ்,  சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதுடன்  பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார் தம்பி ராமையா. 

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதன் போது முன்னணி இயக்குநர்கள், முன்னணி தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலர் பங்குபற்றினர். 

இவ்விழாவில் பேசிய இயக்குநர் பிரபு சாலமோன்,‘தம்பி ராமையா சென்னைக்கு வரும் போது ஒரு இசையமைப்பாளராகவேண்டும் என்ற கனவுடனே வந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இயக்குநராகி, பின்னர் வடிவேலுவுடன் நகைச்சுவை வசனங்கள் எழுதும் வசனகர்த்தாவாகி, நடிகராகி தேசிய விருதும் பெற்றுவிட்டார்.  

ஆனால் அவரின் இசையமைப்பாளர் கனவு மட்டும் நிறைவேறாமல் இருந்தது. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. தொடர்ந்து அவர் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அவ்வப்போது பணியாற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.