ஈராக் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளில் 12 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முற்றிலுமாக அகற்றப்ப்ட நிலையில் வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய சுமார் 20 ஆயிரம் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றுமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி சமீபத்தில் உத்தரவிட்டார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 8 பேர் சமீபத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதால் மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் மரண தண்டனையை துரிதமாக நிறைவேற்ற சிறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இவர்களில் 12 பேருக்கு  நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

ஈராக் சிறைகளில் 100 வெளிநாட்டு பெண்கள் உள்பட சுமார் 300 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.