(எம்.எம்.மின்ஹாஜ்)

சீனாவிடமிருந்து ஒரு சதம் கூட பெறவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கூறுவாரானால் அதனை நாட்டு மக்களுக்கு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக்கு சீனா 7.9 மில்லியன் டொலர் வழங்கியதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகை செய்தி பிரசுரித்துள்ளது. இந்த செய்தியை நாம் ஏளனமாக மதிக்ககூடாது. ஏனெனில் அந்த பத்திரிகை உலகின் நம்பிக்கைக்கு பாத்திரமான பத்திரிகையாகும். 

சீன துறைமுக அபிவிருத்தியுடன் தொடர்புடைய நிறுவனத்தின் (சய்னா ஹார்பர்) ஊடாகவே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துடன் பெளத்த பிக்கு ஒருவரும் தொடர்புபட்டுள்ளார். 

ஆகவே அமெரிக்க ஊடகம் வெளியிட்ட குறித்த தகவல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடன் பதிலளிக்க வேண்டும். 

அத்துடன் சீனாவிடமிருந்து தாம் பணம் பெறவில்லை என சம்பந்தப்பட்ட தரப்பினர்களான முன்னாள் ஜனாதிபதி உட்பட அரசியல்வாதிகளும் பிக்குவும் கூறுவார்களானால், அதனை நாட்டு மக்களுக்கு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.