(நா.தினுஷா) 

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்திலிருந்து கொண்டே சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியின் இந்த 16 பேரும் ஜனாதிபதிக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். அதுமாத்திரமின்றி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலத்திலும் ஒரு போதும் அரசங்கத்தின் ஆதரவளர்களாக இவர்கள் செயற்பட்டதில்லை. பங்காளர்களாக இருந்து கொண்டே அரசங்கத்தை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சிகளையே மேற்கொண்டு வந்தனர். 

இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் எஞ்சியுள்ள சுதந்திரக் கட்சியின் 23 உறுப்பினர்களையும் தேசிய அரசாங்கத்திலிருந்து பிரித்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவே கூட்டு எதிரணியில் தனியான ஒரு தரப்பினராக அமர்ந்தனர். ஆனால் தற்போது ஒரு நேர்த்தியான கொள்கைகள் இல்லாமல் தனியாக செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களின் பிரதான நோக்கம் சூழ்ச்சிகளை பிரயோகித்து அரசாங்கத்தை கவிழ்ப்பதேயாகும் என்றார்.