உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் நேர்த்தியான விளையாட்டின் (பெயார் ப்ளே) அடிப்படையில் முதல் தடவையாக ஓர் அணி இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறுகின்றமை ரஷ்ய உலகக் கிண்ணப் போட்டியில் நிகழ்ந்துள்ளது.

போலந்திடம் ஜப்பானும் கொலம்பியாவிடம் செனகலும் 1 க்கு 0 என்ற ஒரே கோல் எண்ணிக்கையில் தோல்வி அடைந்தன. இதனை அடுத்து ஜப்பானும் செனகலும் போட்ட கோல்கள், விட்ட கோல்கள் மற்றும் நிகர கோல்கள் அனைத்திலும் சமமாக இருந்தன. இதன் காரணமாக பீபாவின் விதிகளின் பிரகாரம் நேர்த்தியான விளையாட்டின் அடிப்படையில் ஜப்பான் இரண்டாம் சுற்றுக்கு செல்ல தகுதிபெற்றது.

இந்த இரண்டு அணிகளில் ஜப்பான் 4 மஞ்சள் அட்டைகளுக்காக 4 மறை புள்ளிகளைப் பெற்றிருந்தது. செனகல் 6 மஞ்சள் அட்டைகளுக்காக 6 மறை புள்ளிகளைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய நேர்த்தியான விளையாட்டில் ஜப்பான் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பு கிடைத்தன் மூலம்  ஆசிய வலயத்திலிருந்து தகுதிபெற்ற ஒரே ஒரு நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது.

2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் இரண்டாம் சுற்றுக்கு ஐரோப்பிய வலயத்திலிருந்து 10 நாடுகளும் அமெரிக்க வலயத்திலிருந்து 5 நாடுகளும் ஆசிய வலயத்திலிருந்து ஒரு நாடும் தகுதிபெற்றுள்ளன.

வொல்கோக்ரட் விளையாட்டரங்கில் நடைபெற்ற எச் குழுவுக்கான போட்டியில் ஜப்பானை 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் போலந்து வெற்றிகொண்டது. ஏற்கனவே இரண்டாம் சுற்று வாய்ப்பை இழந்திருந்த போலந்துக்கு இது ஆறுதல் அளிக்கும் வெற்றியாக அமைந்தது.

போட்டியின் 58 ஆவது நிமிடத்தில் ரபேல் கர்ஸாவாவின் ப்றீ் கிக்கை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஜான் பெட்னாரெக், எதிரணியின் கோலுக்கு மிக அருமையில் இருந்து கோல் போட்டு போலந்தை முன்னிலையில் இட்டார்.

இப் போட்டியில்  கோல் போடுவதற்கு பல சந்தர்ப்பங்களில் ஜப்பான் முயற்சித்த போதிலும் அவை ஒன்றும் கைகூடவில்லை. நேர்த்தியான விளையாட்டு தங்களுக்கு கைகொடுக்கும் என அறிந்திருந்த ஜப்பான், கடைசி கட்டத்தில் பந்தை தம் பக்கமே வைத்து நேரத்தைப் போக்கிக்கொண்டிருந்தது.