(எம்.நியூட்டன்)

வடக்கு  மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இந்திய இழுவைப்படகுகள் விடுவிக்கப்படுமானால் மீனவர்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கடற்றொழிலாளர் இணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனால் வட பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந் நிலையில்  அரசாங்கம் இந்திய இழுவைப் படகுகள் விடுவிப்பு என்பது எங்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயம். 

இலங்கை அரசாங்கத்தின் கையகத்தில் சுமார் 200 இந்திய இழுவைப் படகுகள் உள்ளன. இந்த இழுவைப் படகுகளை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்துவது என்றால் சுமார் 2 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருக்கும். இந்தப் பணம் எங்களுடைய வரிப்பணமாகும்.  எனவே இந்திய இழுவைப் படகுகளை விடுவிப்பதற்கு வடபகுதி மீனவர்களாகிய நாங்கள் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கின்றோம். 

அத்துடன் மீன்பிடி அமைச்சிடம் பல்வேறு கோரிக்கைகளை பல தடவை முன்வைத்துள்ளோம். எனினும் எவருமே வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அக்கறை காட்டவில்லை. 

எனவே வடபகுதி மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது இந்திய இழுவைப்படகுகள் விடுவிக்கப்படுமானால் வடபகுதி மீனவர்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதுடன் அரச திணைக்களங்களை முடக்கி அரசாங்கத்தை ஸ்தம்பிதமடையச் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.