எமது உடலில் ஏற்படும் நோய்களில் இருந்து எம்மை காத்துக் கொள்ள பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள நாம், எவ்வாறு எமது மூளையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக் கொள்கிறோம். வந்தாலும் கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம். அதே போல் இரத்த அழுத்தம் வராமல் தற்காத்துக் கொள்கிறோம். வந்துவிட்ட பிறகு அதனை கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதே போல் மூளையை எப்படி தற்காத்துக் கொள்வது? என்பதற்கு விளக்கம் தருவீர்களா?.

ஆரோக்கியமாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் நாற்பத்தைந்து வயதிற்கு பிறகு அவர்களின் மூளையில் செயல் திறன் குறையத் தொடங்குகிறது. நினைவுத் திறன், பணியாற்றும் திறன், திட்டமிடும் திறன், காரணத்தை ஆராயும் திறன், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவை குறையத் தொடங்குகிறது. 

எம்முடைய மூளையின் பகுதியில் இருக்கும் ஹிப்போ காம்பஸ் என்னும் பகுதி தளர்வடையத் தொடங்கி சுருக்கமடைகிறது. இது இயல்பானது. ஆனால் இதனை தடுக்கவேண்டும் என்றால், தினமும் நாற்பத்தைந்து நிமிடம் காலை வேளையில் சூரிய உதயத்திற்கு சற்று முன் நடைபயிற்சி செய்ய வேண்டும். 

இதன் போது எம்முள் சுரக்கும் ஹோர்மோன் மற்றும் ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாடு ஆகியவை மூளையை உற்சாகத்துடன் வைத்திருக்கும். நாளாந்தம் ஏதேனும் புத்தகத்தை அல்லது விருப்பமான புத்தகத்தை வாசிப்பது அல்லது உரக்க வாசிப்பது மூளையை புத்துணர்வுடன் வைத்திருக்கும். 

அதே போல் தினமும் எட்டு மணித்தியாலம் வரை உறங்கவேண்டும். இதுவும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதே சமயத்தில் உங்களுடைய இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும். கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் மூளையை பாதிக்கும்.

டொக்டர் கோடீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.