தென்னிந்திய சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் அவருக்கு ஜோடியாக  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். படத்தில் இவர்கள் தோன்றும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நானும் ரவுடி தான் படத்திற்கு பின்  நயன்தாராவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் படம் இமைக்கா நொடிகள்.  இதைப் பற்றி இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் கேட்டபோது,‘ கதையை எழுதும் போது முதலில் அதர்வா மட்டுமே இருந்தார். பிறகு எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பட்டுக்கோட்டை பிரபாகர் கதை விவாதத்தில் இணைந்த பிறகு இந்த கதை, கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைக்கதையை வளர்ந்தது. 

அத்துடன் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமானார். அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கவேண்டும் என்று எண்ணிய போது உடனே நினைவில் வந்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவரிடம் சென்று விடயத்தைச் சொன்னதும், அவர் மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டார்.  

அவர் தற்போது மாஸ் ஹீரோவாக இருந்தாலும், நயன்தாரா மீதுள்ள நட்பின் காரணமாகவும், அதர்வா, தயாரிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீதுள்ள அன்பின் காரணமாகவும் கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 

ஆனால் கதை விவாதத்தின் போது அவரின் காட்சிகளை அதிகப்படுத்தி அவர் திரையில் பதினைந்து நிமிடங்கள் வரை தோன்றும் படி காட்சிகளை மேம்படுத்தினோம். அத்துடன் அவருக்கும் நயன்தாராவுக்கும் ஒரு பாடல் காட்சியையும் இணைத்தோம். இது விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பிடிக்கும். படத்தை பார்த்து முடிந்தவுடன் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்கவில்லை என்பதும், முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் தெரியவரும்.‘ என்றார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்ய படமாளிகை வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.