(எம்.மனோசித்ரா)

பாடசாலை மாணவர்களுக்கிடையில் பெருகிவரும் போதைப் பொருள் பாவனையை முற்றாக நீக்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று இடம்பெற்ற புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் விசேட குழுக்கள் அமைத்து பொலிஸாருடன் இணைந்து கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு விரைவில் மேற்கொள்ளும்.

இதே வேளை உயர்தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு டெப் கணனிகள் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையாகவா அல்லது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமா இதனை வழங்குவது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.