பொகவந்தலாவை குயினாத் தோட்டக் கீழ்ப்பிரிவில் தோட்டக்குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்னிணைப்புக்கள் சீரின்மையால் அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மத்திய மாகாணசபை உறுப்பினர் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் பி.கல்யாணகுமாருடன் குயினாத் தோட்டக்கீழ்ப்பிரிவுக்குச் சென்ற போது முறையற்ற மின்னிணைப்பினால் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து குடியிருப்பாளர்கள் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரனின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

குயினாத் தோட்டத்தில் மரத்தினாலான மின்கம்பங்களில் மின்னிணைப்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ள போதும் இந்த மரத்திலான மின்கம்பங்கள் இற்று விழக்கூடிய நிலையிலுள்ளன.

இந்த விடயம் குறித்து இலங்கை மின்சார சபைக்குச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தற்போது சீமெந்திலான மின் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ள போதும் இதுவரை மின்சார கம்பிகள் இணைக்கப்படவில்லை.

இந்த நிலையில் மின்னர்த்தமொன்று ஏற்படுவதற்கு முன்பதாக மரத்தினாலான மின்கம்பங்களின் மின்னிணைப்பை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் இலங்கை மின்சார சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபையின் நுவரெலியா மாவட்ட அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்