(இரோஷா வேலு) 

கொழும்பில் இருவேறு பகுதிகளிலிருந்து ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டு மாளிகாந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

கொழும்பில் இருவேறு பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதீபா மாவத்தை பகுதியில் வைத்து கொழும்பு மத்திய சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால்  3கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், ஹேனமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று மாளிகாந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மருதானை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது. 

அதேபோல், பொரளை சரணபாலகம மாவத்தை பகுதியில் வைத்து பொரளை பொலிஸாரால் 2 கிராம் 280 மில்லிகிராம் ஹெரோயினுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டார். ஒபேசேகரபுற இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரையும் இன்று மாளிகாந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.