முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, அம்பகாமம் பகுதியில் சுமார் 8000 ஏக்கர் நிலங்கள் விமானப்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட கருவேப்புமுறிப்பு குளம் மற்றும் பிரமனாலன் குளம் அவற்றோடு இணைந்த வயல் நிலங்கள் இராணுவத்தினர் அபகரித்து வைத்திருக்கின்றனர். குறித்த பகுதிகள் மக்கள் பாவனைக்காக விடுவித்துத் தரப்படவேண்டும் என்றார்.

கடந்த திங்கட்கிழமை  முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அம்பகாமம் பகுதியில் ஆறு அல்லது ஏழு குளங்கள் உள்ளடங்கலான, அவற்றோடு இணைந்த சுமார் 8000 ஏக்கர் வயல் நிலங்களை இலங்கை விமானப்படையினர் அபகரித்துள்ளனர்.

மேலும் பிரமனாலன் குளத்தினை மூடி பெரும்பகுதி வயல் நிலங்கள் அபகரிக்கப்பட்டு அப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தக் குளத்தின் கீழ் விவசாய நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் பயிர்ச்செய்கை செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.

அதே போல் கருவேப்பம் முறிப்பு குளம் மற்றும் அதனோடு இணைந்த வயல் நிலங்கள் இன்னும் வன இலாகாவினால் விடுவிக்கப்படாமல் உள்ளது. இந்த இரண்டு குளங்களும் விடுவிக்கப்படவேண்டுமென ஏற்கெனவே ஒட்டிசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே இதற்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து இந்த குளங்களும் அவற்றோடு இணைந்த வயல் நிலங்களும் விடுவிக்கப்பட்டு விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றார்.