பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் சண்டிகார் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. இப்போதே தயாராகி வருகிறது. முதல் கட்டமாக 543 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமனம் செய்து வருகிறது.

அடுத்தக் கட்டமாக முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களை தெரிவு செய்து இப்போதே களம் இறக்கவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் முக்கிய தொகுதிகளை ஆய்வு செய்து பட்டியல் தயாரித்துள்ளார்.

குறித்த தொகுதிகளில் எந்தெந்த பிரபலங்களை நிறுத்தினால் மிக எளிதாக வெற்றி பெறலாம் என்றும் வியூகம் வகுத்துள்ளார். அந்த அடிப்படையில் அவர் பிரபலங்களை சந்தித்து பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவை அமித்ஷா சந்தித்து பேசினார். பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நாடெங்கும் முக்கிய நகரங்களுக்கு சென்று பிரசாரம் செய்வதற்காக கபில்தேவின் ஒத்துழைப்பை அமித்ஷா கேட்டதாக அப்போது தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் கபில்தேவை பா.ஜ.க. வேட்பாளராக களம் இறக்கவே அவரை அமித்ஷா சந்தித்து பேசியதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சண்டிகார் பாராளுமன்ற தொகுதியில் கபில்தேவ் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. 

தற்போது சண்டிகார் தொகுதி எம்.பி. ஆக நடிகை கிர்ரான் கெர் இருந்து வருகிறார். அவர் அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க மறுத்தால், கபில்தேவை மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்ய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.