ரஷ்யாவின் இரண்டு மைதானங்களில் ஏக காலத்தில் நடைபெற்றதும் பரபரப்பைத் தோற்றுவித்ததுமான பி குழுவுக்கான இரண்டு போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து ஸ்பெய்னும் போர்த்துக்கலும் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

காலினிங்க்ராட் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஸ்பெய்னுக்கும் மொரோக்கோவுக்கும் இடையிலான போட்டி 2 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இப் போட்டியில் இரண்டு தடவைகள் பின்னிலையில் இருந்த ஸ்பெய்ன், வீடியோ உதவி மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு அமைய வழங்கப்பட்ட கடைசி கோல் மூலம் தோல்வியிலிருந்து தப்பிப் பிழைத்தது.

உபாதையீடு நேரத்தில் வலப்புறத்திலிருந்து பரிமாறப்பட்ட பந்தை நோக்கி ஓடிய இயாகோ அஸ்பாஸ் தனது பின்னங்காலால் பந்தை தட்டி கோல் போட்டார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஓவ்சைட் நிலையிலிருந்ததாக உதவி மத்தியஸ்தர் கொடியை உயர்த்தி சமிக்ஞை கொடுத்தார். ஆனால் வீடியோ மத்தியஸ்தரின் உதவியுடன் அஸ்பாஸ் போட்ட கோல் மத்தியஸ்தரினால் அங்கீகரிக்கப்பட்டது.

போட்டியில் முன்னதாக 14 ஆவது நிமிடத்தில் அண்ட்ரெஸ் இனியெஸ்டா இழைத்த தவறைப் பயன்படுத்திக்கொண்ட காலித் பூட்டெய்ப் மின்னல் வேகத்தில் பந்தை நோக்கி ஓடி அதனை மிகவும் வேகமகாவும் சாமர்த்தியாகவும் சுமார் 45 யார் தூரம் நகர்த்திச் சென்று ஸ்பெய்ன் கோல்காப்பாளர் டேவிட் டி ஜீக்கு வலப்புறமாக கோல் போட்டு மொரோக்கோவை முன்னிலையில் இட்டார்.

ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இனியெஸ்டா சிறந்த வியூகத்தை அமைத்து பரிமாறிய பந்தை இஸ்கோ (பிரான்சிஸ்கோ சுவாரெஸ்) கோலாக்கி ஸ்பெய்னுக்கு உயிரூட்டினார்.

எனினும் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் மொரோக்கோவுக்கு கிடைத்த கோர்ணர் கிக் பந்தை நோக்கி சுமார் 4 அடி உயரம் தாவிய எல் நெஸ்ரி தலையால் முட்டி கோல் போட்டார்.

ஒரு கோல் பின்னிலையில் தோல்விப் பாதையில் சென்று கொண்டிருந்த ஸ்பெய்னுக்கு உபாதையீடு நேரத்தில் கைகொடுத்தவர் இயாகோ அஸ்பாஸ் ஆவார். அவர் போட்ட கோல் ஸ்பெய்னை தோல்வியிலிருந்து மீட்டதுடன் பி குழுவில் முதலாம் இடத்தைப் பெறவும் வழிவகுத்தது. 

முதல் சுற்று பி குழுவில் அணிகளின் இறுதி நிலை

அணி வி வெ   ச  தோ பெ   கொ நி  பு   

ஸ்பெய்ன்  3  2   1    0           6      5        +1   5   

போர்த்துக்கல்        3  2   1    0           5      4        +1   6   

ஈரான்         3  1   1    1           2      2          0   4    

மொரோக்கோ       3 0  1    2           2      4         -2  1

(குறிப்பு: வி: விளையாடிய போட்டிகள், வெ: வெற்றி, ச: வெற்றிதோல்வியில்லை, தோ: தோல்வி, பெ: பெற்ற கோல்கள், கொ: கொடுத்த கோல்கள், நி: நிகர கோல்கள், பு: புள்ளிகள்)

(என்.வீ.ஏ.)