நாட்டின் இன்றைய பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல், வேலையில்லாமைக்கான தீர்வு, உற்பத்தி துறையின் வளர்ச்சி, இறக்குமதி, கைத்தொழில் அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உங்களுடன் இணைந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்றார் ஜனாதிபதி.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நாட்டின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல் ஒன்றின்போது அரச வங்கிகளின் வருமானம் அதிகரித்திருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. 

அதற்கமைய அரச வங்கிகள் வர்த்தக வங்கிகளாகவும் சேவை வழங்குனர்களாகவும் செயற்படுகின்றனவா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த நேர்ந்தது. தனியார் வங்கிகள் வர்த்தக வங்கிகளாகும் என்பதை நாம் அறிவோம். 

எனினும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் அரச வங்கிகள் 50 சதவீதம் வர்த்தக வங்கிகளாகவும் 50 சதவீதம் சேவை வழங்குனர்களாகவும் செயற்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். 

அரச வங்கிகளின் மிதமான இலாபம் நேரடியாக மக்களைச் சென்றடைகின்றதா அல்லது அது அரச செலவினங்களுடன் சேர்ந்து பல்வேறு துறைகளின் ஊடாக முதலீடு செய்யப்பட்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுவதில் வகிக்கும் பங்கு என்ன என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

அன்று மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட வங்கி அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது தொழில்வாய்ப்பின்மை, எமது தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்தல், நிதி மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக உரையாடப்பட்டது. 

மத்திய வங்கி உள்ளிட்ட ஏனைய வங்கிகளில் தொழில்முயற்சியாளர்களுக்கான பல்வேறு கடன் திட்டங்கள் ஏற்கெனவே நடைமுறையிலுள்ளதை இதன்போது அறிய முடிந்தது. 

அத்துடன் அவை தொடர்பில் மக்களிடம் போதிய தெளிவு காணப்படாமை குறித்தும் அதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அரச வங்கிகள் அதிக இலாபம் பெறுகின்றதாயின் அதன் ஒரு பகுதி உள்நாட்டு தொழில்முயற்சிகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது. 

அதன் பெறுபேறாகவே, ஏற்கெனவே காணப்பட்ட கடன் திட்டங்கள் தொடர்பாக நிதி அமைச்சுடனும் வங்கிகளுடனும் கலந்துரையாடி அத்திட்டங்களை 15 பிரிவுகளாக வகைப்படுத்தி கவர்ச்சிகரமான பெயரிட்டு இன்று எமது நாட்டின் இளைஞர் சமூகத்திடமும் தொழில்முயற்சியாளர்களிடமும் புதிய திட்டமாக அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றது. 

குறித்த கடன் திட்டத்தினைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்களுக்காக சகல வங்கிகளிலும் தனியான கருமபீடங்களும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.         

சுமார் 60 பில்லியன் அளவிலான நிதி இத்திட்டத்தின் கீழ் தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 

 குறித்த கடனை வழங்குவதனால் அவர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். ஆயினும் இதனை தொடராய்வு செய்வது அவசியமாகும். அவ்வாறின்றி அரசாங்கம் என்ற வகையில் நாம் எதிர்பார்க்கும் குறிக்கோள்களை எம்மால் அடைய முடியாது

ஒவ்வொரு துறை சார்பாகவும் அவதானிப்பின், கைத்தொழில் மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்காக பெற்றுக்கொள்ளப்படும் கடன்தொகைகள் அந்தந்த விடயங்களுக்காகவே உபயோகிக்கப்படுகின்றனவா? அத்துறையில் அவரது அனுபவங்கள் எவ்வாறானது என்பது போன்ற விடயங்களை நாம் கண்டறிய வேண்டும். 

எமது இளைஞர்கள் படைப்புத்திறனும் குறிக்கோளும் மிக்கவர்கள் என்பதை நாம் அறிவோம்.

தொழில்முயற்சியாளர்கள் தனது அறிவு, அனுபவம், கலைத்திறன் என்பவற்றுடன் சுய முயற்சியோடு முன்னேறுகின்றனர். இவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் உதவியே இந்த கடனுதவியும் ஏனைய உதவிகளும் ஆகும். 

குறித்த கடன் திட்டத்தின் கீழ் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை விவசாயம் மற்றும் கைத்தொழில் சார்ந்த தொழில்முயற்சிகளுக்கே வழங்கப்படுகின்றன. 

இவர்களது உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பினை உருவாக்குதல், நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்தல், பண்டங்களின் உற்பத்திகளின் பண்புத்தரம் போன்ற விடயங்கள் முக்கியமானவையாகும். 

தேசிய கைத்தொழிலில் இவ்விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. இன்று பட்டங்களைக் கூட வெளிநாடுகளிலிருந்தே நாம் கொள்வனவு செய்கின்றோம். இதற்காக நாம் வருத்தப்பட வேண்டும். 

எமது சிறுவயதில் வயல்வெளிக்கு சென்று மூங்கில் மரத்துண்டு ஒன்றினைப் பெற்று நாமே பட்டங்களைச் செய்து கொண்டோம். அது எவ்வளவு படைப்புத்திறன் மிக்கதாகும்? அந்த சிறுவயதில் எவ்வளவு மனத்திருப்தியை நாம் அனுபவித்தோம். அத்தகைய மனத்திருப்தி, படைப்பாற்றல் என்பவற்றுடனேயே சமூகத்திற்கும் நாட்டிற்கும் புதிய மனிதன் கிடைக்கின்றான். 

நாம் சிறுவயதில் வெசாக் பௌர்ணமிக்கு ஒரு மாதத்திற்கும் முன்னரே சிறுவர்கள் ஒன்றிணைந்து வெசாக் கூடுகளை செய்ய ஆரம்பிப்போம். ஆனால் தற்போது அதனையும் வெளிநாடுகளிலிருந்தே கொண்டு வருகின்றோம். 

குறித்த பாரிய கடன் திட்டத்தின் ஊடாக உற்பத்தி செயற்பாடுகளை விருத்திசெய்து கைத்தொழில் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதைப் போன்றே சுயமுயற்சியுடன் முன்னேற எத்தனிப்பவர்களுக்கு கைகொடுத்து உதவிசெய்வதும் எமது நோக்கமாகும். மேலும் இது தேசிய பொருளாதாரத்திலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் திட்டமாக அமையும்.  

இந்த சிறிய உற்பத்திகளே சிறந்த முறையிலும் தரத்திலும் மேற்கொள்ளப்படின் வெளிநாட்டு சந்தைகளுக்கும் அனுப்பப்படலாம். 

சிறு முயற்சியாளர்களை இனங்கண்டு வங்கியினால் கடன் வழங்கப்படுவதனை போலவே நிதி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவை ஒன்றிணைந்து இவர்களது உற்பத்திகளுக்கு ஏற்ற விலை, சந்தைவாய்ப்பு, தர நிர்ணயம் ஆகியவற்றுக்கான செயற்திட்டமொன்றினை உருவாக்க வேண்டியதுடன் அவ்வாறான உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுமாயின் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி கடன் வழங்குவதிலும் பிரயோசனமில்லை. அவ்வாறு இடம்பெறாத சூழலிலேயே சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஏனெனில் சிரமப்பட்டு கடன் பெற்று உற்பத்திகளை மேற்கொண்ட போதிலும் சந்தை வாய்ப்பின்றேல் எதுவித பிரயோசனமும் இல்லை என்பதனாலாகும். 

உலகின் வெற்றியடைந்த சகல நாடுகளும் சுயமுயற்சியோடு தேசிய உற்பத்தி, தேசிய கைத்தொழில் போன்ற தமது நாட்டின் பெறுமானங்களுக்கு மதிப்பளித்தே முன்னேற்றம் அடைந்துள்ளன. எமக்கு வெளிநாட்டு அறிவும் தொழில்நுட்பமும் ஆலோசனைகளும் அவசியமாகும். ஆயினும் எமது நாட்டிற்கு மக்களுக்கு, இளம் தலைமுறையினருக்கு, ஏனைய துறைகளில் சேவையாற்றுபவர்களுக்கு அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் முதிர்ச்சியுடன் ஆற்றலும் காணப்படுகின்றது.  

கடந்த வாரம் நான் புத்தளம், கல்பிட்டிய பிரதேசத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் எமது நாட்டின் மிகச் சிறந்த முன்னுதாரணமான விவசாயிகளாவர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாதுளம் பழங்கள் வர்த்தக நிலையங்களில் ஏராளமாக குவிந்து கிடப்பதனால் அங்குள்ள மாதுளை பயிர்ச்செய்கையாளர்கள் தற்போது தாம் மாதுளைகளை பறிப்பதில்லை என என்னிடம் தெரிவித்தார்கள். 

அதேபோன்றே வாழை பயிர்செய்கையாளர்களும் தெரிவித்தனர். உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இலங்கை வாழைப்பழங்களைப் போன்று சுவையான வாழைப்பழங்கள் இல்லை.

எமது நாட்டில் பயிரிடப்படும் வாழைப்பழ வகைகள் சுவையைப் போன்றே போஷாக்கும் நிறைந்தவை. உயர் தரமானவை. அரசாங்கம் என்ற வகையில் நாம் பாரியதொரு முயற்சியை தற்போது மேற்கொண்டுள்ளோம். அதனை முறையாக மேற்கொண்டால் நிச்சயம் நாம் வெற்றியடையலாம்.

அதேபோன்று விவசாயிகளை நாம் பாதுகாக்காது கைவிட்டுவிட்டால், சந்தைவாய்ப்பு, உரிய விலை மற்றும் ஏற்றுமதிக்கான பாதை என்பவற்றை ஏற்படுத்தாது கட்டுப்பாடின்றி வெளிநாட்டு பழ வகைகளை இறக்குமதி செய்ய அனுமதியளித்தால் எமது விவசாயிகள்  பெரும் இன்னல்களை சந்திக்க நேரிடும். 

இங்குள்ள பல்துறை சார்ந்த நிபுணர்கள், அறிஞர்கள், வங்கி பிரதானிகள், அரச அதிகாரிகள் தொழில் முயற்சியாளர்கள் அதேபோன்று எமது இளம் தலைமுறையினர் ஆகிய அனைவரது குறிக்கோள்களும் ஒன்றே. அரசாங்கம் என்ற வகையில் நாமும் அதையே எதிர்பார்க்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், வேலையின்மைக்கு தீர்வுகாணவேண்டும் என்பதே அதுவாகும்.

இங்குள்ள எமது இளைஞர்கள் சர்வதேச சந்தையை வெற்றிகொண்டுள்ளார்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 

வெளிநாடுகளுக்கு சென்று தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் நமது இளைஞர்கள் உலகை வென்றுள்ளார்கள்.  அதேபோன்று ஏனையவர்களும் முதலில் எமது நாட்டில் சந்தைவாய்ப்பினை பெறவேண்டும். 

அதன்பின்னரே சர்வதேச சந்தையை வெற்றிகொள்ள வேண்டும். அதற்கு எந்தவித தடைகளும் இல்லை. அதற்கான வழிநடத்தல்களை நாம் வழங்குவோம். மிக உன்னத நோக்குடன் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் சாதகமான பெறுபேறுகளை நாம் அடைய வேண்டுமாயின் இங்கு ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என நான் நம்புகின்றேன். 

நாம் சில விழாக்களில் பங்குபற்றும்போது எமது கைவினைப்பொருள் கலைஞர்கள், பல்வேறு துறைசார்ந்த தொழில்முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சந்தை வசதி இல்லை என முறையிடுகின்றனர்.

 நகரத்தில் எமக்கும் ஒரு இடமளியுங்கள். எமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுங்கள் என கேட்கின்றனர். அதற்கான தீர்வுகளையும் இந்த கடன் திட்டத்துடன் இணைந்ததாக நாம் திட்டமிட வேண்டும். 

கடன்பெறுதல், உற்பத்தி செயற்பாடுகள், சந்தைக்கு அனுப்பப்பட வேண்டிய பருவத்தில் சந்தைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். 

ஆகையினால் இத்திட்டத்தில் காணப்படும் சிறு சிறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த செயற்திட்டம் வெற்றிபெற அரசாங்கம் என்ற வகையில் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதை எமது நாட்டின் தொழில் முயற்சியாளர்கள், புதிய தொழில்முயற்சிகள் தொடர்பான எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள், பல்வேறு தொழிற்துறைகளில் பயிற்சி பெற்றுவரும் கல்விகற்ற இளம் சமுதாயத்தினர் ஆகியோருக்கு நாம் உறுதியாக தெரிவிக்கின்றோம்.