பாதாள உலகக்குழு  உறுப்பினர்கள் இருவரைத் தேடி பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து வில்பிற்ற  காட்டுப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிரடிப் படையினருக்கும் பாதாள உலகக் குழுவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த இருவர் குறித்த காட்டுப்பகுதிக்குள் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள நிலையில், விசேட  அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வில்பிற்ற  காட்டுப்பகுதியை  சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். 

மாத்தறை கம்புறுப்பிட்டியில் நேற்று மாலை பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதுஷின் உதவியாளர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.   

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக்குழுத் தலைவரான மாகந்துரே மதுஷின் உதவியாளரான  திலக் என்று அறியப்படும் மனில் ரோஹன என்பவர் உயிரிழந்தார்.

இந்நிலையிலேயே  சம்பவத்தின் போது மனில் ரோஹனவுடன் நின்ற இருவரே குறித்த காட்டுப்பகுதிக்குள் தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.