நுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் வீதியில் சென்ற மாணவன் மீது நேற்று தனியார் பஸ் மோதியதையடுத்து, குறித்த மாணவன் (எம்.சுகிர்தன் - வயது 9) இன்று காலை உயிரிழந்துள்ளான்.

இந்நிலையில் பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக பாடசாலை சூழலில் அசாதாரண நிலை தோன்றியது. 

இதனை அடுத்து, பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் மாணவர்கள் காலை 9.30 மணிமுதல் 11.00 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.விமலதாச நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முற்பட்டபொழுதும் அது முடியாமல் போய்விட்டது.

பின்பு அங்கு வருகைதந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்களான எம்.சந்திரன், ஆர்.கேதீஸ் நுவரெலியா வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாச, உதவி கல்வி பணிப்பாளர்களான மோகன்ராஜ், சோமசுந்தரம் பாடசாலை அதிபர் எம்.விஸ்வநாதன் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி மாணவர்களால் விடுக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.விமலதாச வாக்குறுதி ஒன்றை வழங்கியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர்.

நுவரெலியா ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பாதுகாப்பு வேலியில் தனியார் பேருந்து ஒன்று நேற்று மாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் குறித்த மாணவனும் பெண் ஒருவரும் காயத்திற்குள்ளான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)