முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் உரியவகையில் பதிவுகளை மேற்கொண்டு இயங்குவதற்கு ஆறுமாத கால அவகாசம் வழங்கபடவேண்டும் என இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்ற பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் சிலவற்றின் மீது பிராந்திய சுகாதார பணிமனையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிமனையினரின் அசமந்த போக்கை கண்டித்தும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வர்தகர்கள் மருந்தக உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்  ஒன்றினை இன்று காலை மேற்கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து இன்றையதினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த விடயம் எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மருந்தக உரிமையாளர்கள் சார்பில் தமது பக்க நிலைபாட்டை விளக்கியிருந்தனர். இதன்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு செய்யபடாமல் சட்டவிரோதமாக இயங்கும் மருந்தகங்களுக்கு எதிராக தாம் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தெளிவு படுத்தினர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான வணிக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன் ஆகியோர் மருந்தக உரிமையாளர்களுக்கு எதிராக திடீரென எடுக்கபட்டுள்ள இந்த நடவடிக்கையால் அவர்கள் பாதிப்படைய கூடாது எனவும் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை பெறவேண்டிய தேவை உடைய மக்கள் வவுனியா அல்லது கிளிநொச்சிக்கே சென்று மருந்துகளை பெறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையும் கருத்தில் கொண்டு ஆறுமாதகால அவகாசம் வழங்கவேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஏகமனாதாக தீர்மானத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இருந்தபோதிலும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் அவர்கள் இதற்க்கு உடன்படவில்லை இங்கே கருத்து தெரிவித்த அவர் , “முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தால் பாதிக்கபட்டு வறுமையால் பாதிக்கபட்டு நொந்துபோயுள்ள மக்கள் வாழுகின்ற மாவட்டம் இங்கே உள்ள மக்கள் மருந்தகங்களுக்கு சென்று மருந்துகளை வாங்குகின்றபோது பக்கவிளைவுகளை விளங்காது உரியவகையில் வழங்கவேண்டிய மருந்துகளை வழங்க தெரியாத வகையில் ஏன் மருந்தை குடிக்கின்றோம் எதுக்காக குடிகின்றோம் இது சரியான மருந்தா என தெரியாது மீண்டும் மீண்டும் பாதிக்கபட்ட இந்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் மருந்தகங்கள் இயங்குகின்றதே இதனால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்டுவார்களே என விளங்கிகொள்ளாது ஆறு வர்த்தகர்கள் பாதிக்கப்டுவார்களே என நீங்கள் கதைத்துகொண்டிருக்கின்றீர்களே இது நியாயமா ?” என தெரிவித்தார் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு மருந்தகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நான்கு மருந்தகங்களும் மருந்து வழங்கும் நடவடிக்கையினை கடந்த 20 ஆம் திகதி முதல் நிறுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஒரு மருந்தகம் மற்றும் புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு மருந்தகம் மற்றும் முல்லைத்தீவு நகரில் இரண்டு மருந்தகங்கள் இதுவரை சட்டரீதியான பதிவுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் பிராந்திய சுகாதார பணிமனையினரால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் குறித்த மருந்தகங்களின் உரிமையாளர்கள் கடந்த காலங்களில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் பிராந்திய சுகாதார பணிமனையினர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பதிவு நடவடிக்கைக்கு இழுத்தடிப்பு செய்து பதிவு செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இன்னிலையில் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் வடமாகாண முதல்வர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மருந்தக உரிமையாளர்களின் நியாயமான செயற்பாட்டினை எடுத்துக்காட்டியும்,பிராந்திய சுகாதார பணிமனையின் அசமந்த போக்கான நடவடிக்கையினை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வர்த்தகர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.