(இரோஷா வேலு) 

எனது வீட்டில் தனிப்பட்ட வகையில் அநுநாயக்க தேரரை சந்தித்து உரையாடியதுடன் அவர் வழங்கிய அறிவுரைகளை ஏற்று செயல்படுகின்றேன். இன்னும் இரு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறியக்கிடைக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டீ.ஏ.ராஜபக்ஷவின் நினைவுத் தூபி அமைத்தலின் போது பொது மக்களின் நிதியை சட்டத்திற்கு புறம்பான வகையில் பயன்படுத்தியமை தொடர்பாக இன்று காலை நிதி மோசடி விசாரணை பிரிவில் கோத்தபய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைத்தமை தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்காக இன்று நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கினேன். இனி இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை நிதி மோசடி விசாரணை பிரிவு மேற்கொள்ளும்.

நான் எனது வீட்டில் தனிப்பட்ட வகையில் அநுநாயக்க தேரரை சந்தித்து உரையாடினேன். இதன்போது அவர் வழங்கிய அறிவுரைகளை ஏற்று செயல்படுகின்றேன். ஆனால் இவ்வாறு எனது தனிப்பட்ட விடயம் குறித்து சிலர் கருத்துக்களை வெளியிடுவது எவ்வகையில் நாகரீகமானது?

தேரர்கள் வழங்கும் போதனையை புரிந்துகொள்ள ஞானம் வேண்டும். ஞானம் உள்ளவர்களினாலேயே போதனைகளை புரிந்துகொள்ள முடியும். நான் அதனை புரிந்துகொண்டேன். அதனை புரிந்து கொள்ள முடியாதவர்களே இவ்வாறானா கருத்துக்களை பரப்புகின்றனர்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போகும் ஜனாதிபதி வேட்பாளர் என்பது இன்னும் இரண்டு மாதங்களில் அறியக்கிடைக்கும் என்றார்.