2015 உலக கிண்ணப்போட்டிகள் உட்பட பல போட்டிகளின் போது ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுபவர்கள் தன்னை அணுகியதாக பாக்கிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் தகவல் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் விசாரணை பிரிவு அக்மலை விசாரணைக்கு அழைத்துள்ளது.

2012 ஹொங்ஹொங் சிக்சர்ஸ் போட்டி,தென்னாபிரிக்காவுடனான தொடர் மற்றும் 2015 இல் உலககிண்ண போட்டிகளில் இந்தியாவுடன் இடம்பெற்ற போட்டி ஆகியவற்றில் இரண்டு பந்துகளை வீணாக்கினால் தனக்கு 200,000 டொலர்களை வழங்க சிலர் முன்வந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான போட்டிகளிற்கு முன்னதாக எப்போதும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுபவர்கள் என்னை அணுகினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் பலரை பிடித்துக்கொடுத்துள்ளேன் என்னை விட வேறு எவரும்; பாக்கிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் இது குறித்து அதிகளவு முறைப்பாடு செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹொங்ஹொங் சிக்சர்ஸ் போட்டியொன்றின் போது அதிகாலை வேலையில் அறைக்கதவை தட்டிய அதிகாரியொருவர் என்னுடன் பேசினார் அவர் எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதாக தெரிவித்தார் நான் இதனையும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகளிடம் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.