மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித  எலும்புகள் அகழ்வு பணிகளின் போது இது வரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்தியநிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வந்த அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இடை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில்   20 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் ஆரம்பமானது.

விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமான அகழ்வுப் பணிகளின் போது அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினர் மற்றும் அழைக்கப்பட்ட அதிகாரிகள் இணைந்து அகழ்வுப்பணிகள் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதன் போது ஊடகவியலாளர்கள், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த  விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ,

குறித்த அகழ்வு பணிகள் மிகவும் நுனுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அகழ்வு பணிகளிகள் நிறைவடையும் வரை எவற்றையும் கூற முடியாது. தொடர்ந்தும் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. சில தடயங்கள் காணப்பட்டுள்ளது அவற்றை மீட்டுள்ளோம்.

ஆனால் வேறு எந்த அபாயகரமான தடயப்பொருட்கள் கிடைக்கவில்லை என தெரிவித்தார். நீதிவான் முன்னிலையில் 20 ஆவது தடவையாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றது. முழுமையாகவும், துண்டு துண்டுகளாகவும் மனித எலும்புகள் மீட்கப்பட்டு வருகின்றது.

பல்வேறு தரப்பினரின் உதவியுடன் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே அகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. குறித்த வளாகம் முழுமையாக அகழ்வு செய்யப்படும்.

நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாகவே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது கருத்துக்களை ஊடகவியலாளர்கள் பதிவு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் பணித்தமையினால் அவற்றை ஊடகவியலாளர்கள் பதிவு செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.