நடைபெற்று முடிந்த துருக்கி தேர்தலில் ரஜப் தையிப் எர்துகான் மீண்டும் வெற்றிபெற்று அந் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகியிருப்பதாக துருக்கிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை துருக்கியில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. இதில் பதிவான  99 சதவீதமான வாக்குகளில் எர்துகானின் நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி 53 சதவீத வாக்குளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட முஹராம் இன்ஸின் கட்சி 31 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டதாக துருக்கிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.  

இதனால் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் எர்துகான் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளதாால் "வெற்றிபெறுவதற்கு தேவையான முழுமையான பெரும்பான்மையை ஜனாதிபதி ரிசெப் பெற்றுள்ளார்" என்று தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென் கூறியுள்ளார்.

எனினும் தேர்தல் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் துருக்கியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளையடுத்து அங்கு கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டு பிரதமராட்சியிலிருந்து விடுபட்டு, தமது நாடு ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாற வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்தனர். 

இதற்கமைவாகவே தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட துருக்கியின் முதலாவது ஜனாதிபதியாக எர்துகான் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.