கஸான் எரினா விளைாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற போலந்துடனான எச் குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் மிகவும் அவசியமான வெற்றியை கொலம்பியா ஈட்டியது. 

அப் போட்டியில் 3 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் கொலம்பியா வெற்றிபெற்றதை அடுத்து போலந்து முதல் சுற்றுடன் நடையைக் கட்ட நேரிட்டுள்ளது.

மேலும் இந்த வெற்றியானது கொலம்பிா இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தோற்றுவித்துள்ளது.

தத்தமது ஆரம்பப் போட்டிகளில் தோல்விகளைத் தழுவியதால் அழுத்தத்துக்கு மத்தியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. மேலும் தத்தமது வெற்றிக்கான இரண்டு அணிகளும் இப் போட்டியில் கடும் முயற்சியுடன் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் விளையாடின.

போட்டியின்  40 ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் ரொட்றிகூஸ் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை யெரி மினா முறையாகப் பயன்படுத்தி கொலம்பியாவின் முதலாவது கோலைப் போட்டார்.

இடைவேளையின் பின்னர் கடுமையான எதிர்த்தாடும் தன்மையைப் பிரயோகித்து கொலம்பியாவுக்கு நெருக்கடி கொடுத்த வண்ணம் போலந்து விளையாடியது. இதன் பலனாக போலந்துக்கு கோல் போடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. 

ரொபர்ட் லெவொண்டோவ்ஸ்கி கோல் நிலையை சமப்படுத்த முயற்சியை கொலம்பிய கோல் காப்பாளர் டேவிட் ஒஸ்பினா முன்னால் நகர்ந்து தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து ஐந்து நிமிட இடைவெளியில் கொலம்பியா இரண்டு கொல்களைப் போட போலந்தின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.

போட்டியின் 70 ஆவது நிமிடத்தில் யுவான் குவி்ன்டீனோ புத்தி சாதுரியமாக பரிமாறிய பந்தை பெல்கோ மிக இலாவகமாக கோலாக்கினார். ஐந்து நிமிடங்கள் கழித்து ஜேம்ஸ் ரொட்றிகூஸின் உதவியுடன் கொலம்பியாவின் மூன்றாவது கோலை யுவான் குவாட்ராடோ புகுத்தினார்.

கொலம்பியாவின் வெற்றியை அடுத்து எச் குழுவில் ஜப்பான், செனகல், கொலம்பியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில் இரண்டாம் சுற்றுக்கு தகதிபெறுவதற்கான போட்டி நிலவுகின்றது.

இக் குழுவில் ஜப்பானுக்கும் போலந்துக்கும் இடையிலான போட்டியும் செனகலுக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான போட்டியும் முதல் சுற்றில் எஞ்சியுள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் எதிர்வரும் 28ஆம் திகதி ஏககாலத்தில் நடைபெறவுள்ளன. 

(என்.வீ.ஏ.)