வவுனியாவில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வரும் மலையக உறவுகளை அல்லது இந்திய வம்சாவளி மக்களை இழிவுபடுத்தியும் உணர்வுகளைத்தூண்டும் விதத்திலும் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ள இளைஞன் ஒருவரை இன்று காலை வவுனியா பிரதேச செயலகத்திற்குள் வைத்து மடக்கி ஒன்று திரண்டு குரலெழுப்பிய மக்கள் அவரை பொலிசாரிடம் இனங்காட்டி பிடித்துக்கொடுத்துள்ள சம்பவம் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதனால் பிரதேச செயலகத்தில் சற்று பதட்ட நிலை தோன்றியிருந்ததுடன் பொலிசார் பாதுகாப்பினை மேற்கொண்டனர்.

இன்று காலை வவுனியா சிந்தாமணி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் வவுனியா மாவட்டத்தின் ஏற்பாட்டில் வவனியா மாவட்டத்தில் பரந்தளவிலும் பாரியளவிலும் இந்திய வம்சாவளி அல்லது மலையக மக்களாகிய தாம் வாழ்ந்து வருவதாகவும் ஆனால் சில நயவஞ்சகர்களும், இனத்துரோகிகளும் காலத்திற்குக்காலம் துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் நேரடியாகவும் தம்மை கேவலப்படுத்தியும் கொச்சைப்படுத்தியும் வருகின்றார்கள் என்றும் எமது இனத்தை இழிவுபடுத்தாதீர்கள் என்று தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். 

ஆர்ப்பாட்டம் சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான கண்டி வீழிவழியாக சென்று மணிக்கூட்டுக்கோபுரம், பஜார் வீதி, ஹொறவப்பொத்தான வீதி, சென்று இலுப்பையடி ஊடாக மாவட்ட செயலகத்தை அடைந்தது அங்கு உதவி மாவட்ட செயலளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்த பின்னர், வவுனியா பிரதேச செலயகத்திற்குள் சென்ற போராட்டக்காரர்கள் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். 

இதன்போது குறித்த மக்களை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ள நபரும் அங்கு இடம்பெறும் போராட்டத்தினைப்பார்வையிடுவதற்குச் சென்றபோது போராட்டக்காரர்களினால் குறித்த நபர் இனங்காணப்பட்டு அவருடன் வாய்த்தர்கத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் பிரதேச செலயகத்தில் சற்று பதட்டமான சூழ்நிலை உருவாகியது இதையடுத்து குறித்த நபர் பிரதேச செயலகத்திற்குள் ஓடி ஒழிந்து கொண்டார். வெளியே நின்றிருந்த போராட்டக்காரர்களை அவரை முற்றுகையிட்டதுடன் பிரதேச செயலகத்தினை வழிமறித்து குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சம்பவ இத்தில் கடமையிலிருந்து பொலிசார் குறித்த நபரையும் போராட்டம் மேற்கொண்ட தலைமையினரையும் அழைத்து பேச்சுக்கள் நடாத்திய பின்னர் சந்தேக நபரைக் பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து போராட்டம் மேற்கொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.