(நா.தினுஷா) 

எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்துவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினரின் எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கத்தை எதிர்த்தே நாம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோம். அந்த வகையில் எதிர்வரும் மாகாணசபைகளுக்கான தேர்தலின் போது ஐ.தே.வை தோல்வியடையச் செய்வதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.

இந் நிலையில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலின்போது தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 23 பேரும் விலகி வருவார்களானால் எதிர்காலத்தில் சுந்திரக் கட்சியை பலப்படுத்தி மக்களின் தேவைகளை புரிந்து செயற்படும் செயற்றிறன் மிக்க கட்சியாக மாற்றியமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்றார்.