2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் ஆசியாவையும் ஆபிரிக்காவையும் கொடிகட்டிப் பறக்கசெய்வதற்கு முயற்சித்துவரும் ஜப்பானும், செனகலும் தமக்கு இடையிலான எச் குழு லீக் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டன.

எக்கெத்தரினா எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் மாற்று வீரராக களம் நுழைந்த கெய்சூக் ஹோண்டா போட்டியின் 78ஆவது நிமிடத்தில் போட்ட அபார கோல் போட்டியை வெற்றிதோல்யின்றி முடிவடையச் செய்தது.

இதன் மூலம் மூன்று வெவ்வேறு உலகக் கிண்ணப் போட்டிகளில் (2010, 2014, 2018) ஜப்பான் சார்பாக கோல் போட்ட முதலாவது வீரரான ஹொண்டா, ஜப்பான் 1 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் பின்னிலையில் இருந்தபோது ஷஞ்சி ககாவாவுக்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார். 

போட்டி முடிவடைய 12 நிமிடங்கள் இருந்தபோது ஹொண்டா எதிரணியின் கோலை நோக்கி பந்தை பலமாக உதைத்தபோது, செனகல் கோல்காப்பாளர் காதிம் எடியாயே இழைத்த தவறினால் ஜப்பானுக்கு கோல் கிடைத்தது.

இரண்டு அணிகளும் சமமாக மோதிக்கொண்ட இப் போட்டியின் 11ஆவது நிமிடத்தில் ஜப்பான் கோல்காப்பாளர் எய்ஜி கவாஷிமா திசைதிருப்ப விளைந்த பந்து சாடியோ மானேயின் முழங்காலில் பட்டு செனகலுக்கு கோலானது.

கொல் நிலையை சமப்படுத்த கடும் முயற்சி எடுத்துக்கொண்ட ஜப்பான் 34ஆவது நிமிடத்தில் டக்காஷி இனுய் மூலம் அதனை ஈடேற்றிக்கொண்டது.

இந் நிலையிலிருந்து இரண்டு அணியினரும் வெற்றி கோலைப் போடும் நோக்கில் முரட்டுத்தனத்தைக் கடைப்பிடித்தனர். இதன் காரணமாக இத்தாலி மத்தியஸ்தர் ஜியான்லூக்கா ரொச்சியின் மஞ்சள் அட்டைக்கு சில வீரரகள் உள்ளானார்கள்.

எவ்வாறாயினும் போட்டியின் 71ஆவது நிமிடத்தில் மூசா வாகுவே போட்ட கோல் செனகலை மீண்டும் முன்னிலையில் இட்டது.

மறுநிமிடம் ககாவாவுக்குப் பதிலாக மாற்று வீரராக களம நுழைந்த ஹொண்டா 6 நிமிடங்கள் கழித்து கோல்போட்டு ஜப்பானின் ஹீரோவானார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் தலா 4 புள்ளிகளுடன் இரண்டு அணிகளும் எச் குழுவில் முன்னிலையில் இருக்கின்றன. 

(என்.வீ.ஏ.)