இலங்கை அணியுடன் மேற்கிந்திய தீவுகளிற்கு சென்றிருந்த சுழல்பந்துவீச்சாளர் மைக்கல் வன்டர்சே ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை தொடர்ந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் முடிவடைந்த பின்னர் வன்டர்சே இரவு விடுதிக்கு வேறு சில வீரர்களுடன் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்டர்சேயை ஹோட்டலில் காணாததன் காரணமாக அணி முகாமைத்துவம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னர் ஹோட்டலிற்கு திரும்பியுள்ள வன்டர்சே தான் சில வீரர்களுடன் இரவுவிடுதிக்கு சென்றதாகவும் பின்னர் அந்த வீரர்கள் தன்னை விட்டுவிட்டு ஹோட்டல் திரும்பிவிட்டனர் எனவும் தான் வழிதெரியாமல் தடுமாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்ட அணி நிர்வாகம் அவரை   இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

வன்டர்சே முன்னரும் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் இடம்பெற்ற பயிற்சிப்போட்டிகளின் போது இவர் காணாமல்போயிருந்ததை தொடர்ந்து கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தார்.