(இரோஷா வேலு) 

அபரதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகல சந்தியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சு தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

அபரதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகல சந்தியில் வைத்து இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் மீது இன்னுமொரு மோட்டார் சைக்கிளிலும் முச்சக்கர வண்டியிலும் வந்த மூவர் வாள் வெட்டு மற்றும் கத்தி குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இதன்போது படுகாயமடைந்த குறித்த இளைஞர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 24 வயதுடைய அபரதுவையை சேர்ந்த லக்பிரிய அகலங்க லொகுபிடிய என்பவரே உயிரிழந்துள்ளதுடன்  இவரது சடலம் பிரதேத பரிசோதனைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

தனிப்பட்ட விரோதம் காரணமாகவே குறித்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.