டியூனிசியாவுக்கு எதிராக மொஸ்கோ, ஸ்பார்ட்டக் விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற ஜீ குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் 5 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றியீட்டிய பெல்ஜியம் இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தது. 

அதேவேளை இப் போட்டியில் தோல்வியைத் தழுவய டியூனிசியா முதல் சுற்று முடிவில் நாடு திரும்பவுள்ளது.

இப் போட்டியில் ஈடன் ஹஸார்ட், ரொமேலு லூக்காக்கு ஆகிய இருவரும் தலா இரண்டு கோல்களை பெல்ஜியம் சார்பாக போட்டனர். லூக்காக்கு இதுவரை இரண்டு போட்டிகளில் நான்கு கோல்களைப் போட்டு க்றிஸ்டியானோ ரொனால்டோவுடன் தங்கப் பாதணிக்கான போட்டியில் சமநிலையில் உள்ளார்.

போட்டி ஆரம்பித்ததுமுதல் டியூனிசியா கோல் எல்லையை ஆக்கிரமித்த பெல்ஜியம் 6ஆவது நிமிடத்தில் பெனல்டி ஒன்றைப் பெற்றது. டியூனிசியா பெனல்டி எல்லையில் முரணாக வீழ்த்தப்பட்ட அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட், தனது அணிக்குக் கிடைத்த பெனல்டியை முறையாகப் பயன்படுத்தினார்.

பத்து நிமிடங்கள் கழித்து ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் பரிமாறிய பந்தை சாமர்த்தியமாக நகர்த்திச் சென்ற லூக்காக்கு, முன்னோக்கி வந்த டியூனிசியா கோல்காப்பாளர் பாறூக் பென் முஸ்தபாவை கடந்து பந்தை இலாவகமாக கோலினுள் புகுத்தினார்.

ஆனால் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பதிலடி  கொடுத்த டியூனிசியா கோல் நிலையை 1 க்கு 2 என ஆக்கியது. அந்த சந்தர்ப்பத்தில் களத்தின் இடதுபுறத்திலிருந்து காஸ்ரி உதைத்த ப்றீ கிக்கை டிலான் ப்றொன் தலையால் தட்டி கோலாக்கினார். 

இதனை அடுத்து நிலைமை மோசமாகிவிடுமோ என எண்ணிய பெல்ஜியம் அணியினர் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க பிரயத்தனம் எடுத்தனர்.

இடைவேளைக்கு முந்தய உபாதையீடு நேரத்தில் தோமஸ் மியூனியர் பரிமாறிய பந்தை பெற்றுக்கொண்ட லூக்காக்கு பந்தை நகர்த்தியவாறு முன்னே செல்ல, எதிரணி கோல்காப்பாளர் பென் முஸ்தபா தரையில் சாய்ந்தபோது பந்தை கோலினுள் செலுத்தி இரண்டாவது கோலைப் போட்டார்.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது 51ஆவது நிமித்தில் கெவின் டி ப்றயன் பரிமாறிய பந்தை ஈடன் ஹஸார்ட் கோலாக்கினார்.

தொடர்ந்து பெல்ஜிய வீரர் மிச்சி பெட்ஷுஆய் அடுத்தடுத்து மூன்று கொல்போடும் வாய்ப்புகளக் துரதிருஷ்டவசமாக கோட்டை விட்டார்.

எனினும் 90ஆவது நிமிடத்தில் மிச்சி பெட்ஷுஆய் கொல்போட்டு தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டார்

தொடர்ந்து உபாதையீடு நேரத்தின்போது வாஹ்பி காஸ்ரி மிக சாதுரியமாக டியூனிசியா சார்பாக ஆறுதல் கொல் ஒன்றைப் போட்டார். 

(என்.வீ.ஏ.)