(நா.தனுஜா)

இந்து சமுத்திர கடற்பிராந்தியத்தில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உயர்தொழில் நுட்பங்களைக் கொண்ட நோர்வேயின் டாக்டர். பிரிட்ஜொப் நன்சன் ஆய்வுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

நோர்வேயின் பிரசித்திபெற்ற ஆய்வுக்கப்பலான டாக்டர். பிரிட்ஜொப் நன்சன் இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியத்தில் கடல்வள ஆய்வு, மீன்வள ஆய்வு மற்றும் கடல் மாசாக்கல் காரணிகள் தொடர்பான ஆராய்ச்சி என்பவற்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இக்கப்பல் எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நின்று தனது கடல் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்த கப்பல் மேற்கொள்ளும் ஆய்வின் மூலாக இலங்கையின் கடல்வளத்தை பாதுகாத்தால், மீன்வளத்தின் நிலவுக‍ையைப் பேணுவதற்கான உத்திகள், கடல்வள மாசாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் என்பனவும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நோர்வேயின் ஆய்வுக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், இலங்கைக்கான நோர்வே தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் பல்வேறு நோர்வே பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.