பசுபிக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர் விமானங்களை இலக்கு வைத்து லேசர்கள் பாய்ச்சப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் முதல் இவ்வாறான 20 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவே இவற்றிற்கான காரணமாகயிருக்கலாம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களிற்கு முன்னரும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த லேசர் தாக்குதல்கள் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் கிழக்காபிரிக்க நாடொன்றில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவத்தில் அமெரிக்க விமானிகள் காயமடைந்ததை தொடர்ந்து அமெரிக்கா சீனா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சமீபத்தைய சம்பவங்கள் அனைத்தும் சர்ச்சைக்குரிய கிழக்கு சீனா கடல்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனா இவ்வகை தாக்குதலிற்கு நேரடியாக காரணமாகயிருக்காவிட்டாலும் அதன் முகவர்கள் இதனை செய்திருக்கலாம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தரையிலிருந்தும் மீன்பிடிப்படகுகளில் இருந்தும்  லேசர் தாக்குதல்கள் இடம்பெற்றுதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.