மாத்தறையில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தறை நகரில் அமைந்துள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் நேற்றையதினம் 7 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பலொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.

இதன்போது மூன்று பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஐவர் காயமடைந்தனர். இதில், ஒரு பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காயமடைந்த நிலையில் தலைமறைவாகியிருந்த கொள்ளையர்களில் மூவர், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரான கொஸ்கொட தாரக்க தற்போதும் கராபிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவரது சகோதரரான மகேஷ் மற்றும் மேலும் ஒருவரும் குறித்த வைத்தியசாலையில் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மாத்தறை தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது நேற்றையதினம் வெயாங்கொட பகுதியில் வைத்து சாமர இந்திரஜித் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரான சாமர இந்திரஜித் என்பவர் இன்றையதினம் பொலிஸாரின்  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது பையில் இருந்த கைக்குண்டொன்றின் மூலம் பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்ள நிலையில், உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் , அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சாமர இந்திரஜித் என்பவர் அண்மையில் அத்தனகல்லையில் இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொள்ளையர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு தானியங்கி துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்று கொஸ்கொட தாரகவின் தாயின் பெயரில் பதிவாகியுள்ள நிலையில் , அவரது தாயாரும் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

மாத்தறை கொள்ளைச் சம்பவத்துடன் ஏழு பேர் ஈடுபட்டதுடன் அவர்களில் நால்வர் கைது இதுவரை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் , குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.