(எம்.சி.நஜிமுதீன்)

அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கு கூட்டு எதிர்க்கட்சியின்  பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவின் இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையை ஏற்றுக்கொள்பவர்கள் கூட்டு எதிரணியின் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என கடந்த வாரம் கூட்டு எதிர்க்கட்சியின் குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலமையை ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியினால் கூட்டு எதிர்க்கட்சியின் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாது. இரு பக்கமும் கால்களை வைத்துக்கொண்டிருக்கும் அத்தரப்பினால் கூட்டு எதிர்க்கட்சியின் குழுக் கூட்டத்தில் எவ்வாறு கலந்துகொள்ள முடியும்?

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி, கூட்டு எதிர்க்கட்சியின் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதானால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையை மாத்திரம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்பவர்களே கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என்றார்.