(இராஜதுரை ஹஷான்)

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை முற்றாக அகற்றி, தனி ஈழ நாடாக வடக்கை உருவாக்கி விடுதலை புலிகளின் இயக்கத்தை தோற்றுவிப்பதே வடக்கு அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம் என தேசிய சுதந்திர முன்னணியின்  ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அரசாங்கம் இராணுவத்தினரை பலவீனப்படுத்தி, மேற்குலக குறிப்பாக புலம் பெயர் விடுதலை புலிகளின் நோக்கத்தினை நிறைவேற்றவே முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. ஒரு புறம் நாட்டுக்காக போராடிய இராணுவ வீரர்கள் தண்டனை  பெற்று வருகின்றனர். மறுபுறம்  இராணுவத்தினரது உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றது. 

இந் நிலையில் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை முற்றாக அகற்ற வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கமும், விக்னேஸ்வரனும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை முற்றாக அகற்றி தனி, ஈழ நாடாக வடக்கை உருவாக்கி விடுதலை புலிகளின் இயக்கத்தை தோற்றுவிப்பதே இவ்வாறான வடக்கு அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம். 

ஆகவே  இவர்களது நோக்கங்களை அரசாங்கம் புரிந்துகொண்டு இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்கும் வழிமுறைகளையே உருவாக்க வேண்டும். இல்லாவிடின் இருக்கின்ற குறுகிய காலமாவது அமைதியாக இருந்து ஆட்சிபுரிய வேண்டும் என்றார்.