இவ் வருட உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்களில் வயதில் குறைந்த இரண்டாவது வீரரான எம்பாப்பே போட்ட கோல் மூலம் 1 க்கு 0 என பெருவை வெற்றிகொண்ட பிரான்ஸ் சி குழுவிலிருந்து உலகக் கிண்ண முன்னோடி கால் இறுதிச் (இரண்டாவது) சுற்றுக்கு முன்னேறிய முதலாவது அணியானது.

மேலும் ரஷ்யா, உருகுவே ஆகிய நாடுகளுடன் மூன்றாவது அணியாக பிரான்ஸ் இரண்டாம் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது.

எக்கெத்தரின்பேர்க் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியின் 34ஆவது நிமிடத்தில் அன்டொய்ன் க்றீஸ்மான் பரிமாறிய பந்தை ஒலிவியர் கிரூட் ஓங்கி உதைக்க அப் பந்து க்றிஸ்டியன் ரமோஸ் மீது பட்டு பெரு கோல்காப்பாளர் பெட்ரோ கொலெசிக்கு மேலாக சென்றது. அந்த சந்தர்ப்பத்தில் துரிதமாக நகர்ந்த கிலியான் எம்பாப்பே வெறுமனே இருந்த கோலுக்குள் பந்தை தட்டிவிட்டார்.

இதன் மூலம் பிரான்ஸ் சார்பாக உலகக் கிண்ணப் போட்டியில் மிக இளவயதில் கோல் போட்டவர் என்ற பெருமைக்குரியவரானார். 

அவஸ்திரேலிய வீரர் டெனியல் அர்ஸானி என்பவரே உலகக் கிண்ணப் போட்டிககளில் இம்முறை விளையாடும் மிகக் குறைந்த வயதுடைய வீரராவார். அர்ஸானிக்கும் எம்பாபேக்கும் 19 வயதானபோதிலும் எம்பாபேயை விட அர்ஸானி 15 தினங்கள் இளையவராவார்.

பிரான்ஸுடனான நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அல்லது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்தால் மாத்திரமே இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதை மனத்தில் நிறுத்தி பெரு விளையாடியது.

மறுபுறத்தில் முன்னாள் சம்பியனான பிரான்ஸும் வெற்றியைக் குறிவைத்தே விளையாடியது. இதன் காரணமாக போட்டியில் விறுவிறுப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. 

ஒவ்வொரு அணியும் எதிரணியின் கோல் அருகே பந்தை நகர்த்திச் செல்லும் போதெல்லாம் இருபக்க வீரர்கள் மத்தியிலும் படபடப்பு காணப்பட்டது.

போட்டியின் 30ஆவது நிமிடத்தில் பெருவுக்கு கோல் போடுவதற்கான அருமையான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. எடிசன் ப்ளோரெஸ் பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள்ளிருந்து கோலாக்க பாவலோ குரேரோ முயற்சித்தார். ஆனால் அவர் உதைத்த பந்து நேராக பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹியூகொ லோரிஸின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

நான்கு நிமிடங்கள் கழித்து பிரான்ஸ் வீரர் எம்பாப்பே தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் போட்டார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் கோல் போட எடுத்த முயற்சிகள் ஒன்றில் முறியடிக்கப்பட்டன அல்லது கைகூடாமல் போயின.

இடைவேளையின் பின்னரும் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர். ஆனால் முயற்சிகள் அனைத்தும் இலக்கு தவறியவண்ணம் இருந்தன.

65ஆவது நிமிடத்திலிருந்து பெரு தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய போதிலும் கோல் போடும் அதிர்ஷ்டம் கிட்டவில்லை. 

போட்டியின் 81ஆவது நிமிடத்தில் எடிசன் ப்ளோரெஸுக்கு மத்தியஸ்தரினால் மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டது. ஆனால் அந்த மஞ்சள் அட்டை தனக்கு ஏன் காட்டப்பட்டது என ப்ளோரெஸ் குழம்பியபோதிலும் மத்தியஸ்தர் மொஹமத் அப்துல்லாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. எனினும் வீடியோ உதவி மத்தியஸ்தரினால் சரியான தகவல் கொடுக்கப்பட்டதும் ப்ளோரெஸுக்கு காட்டிய மஞ்சள் அட்டையை வாபஸ் பெற்ற மத்தியஸ்தர், மஞ்சள் அட்டைக்கு உரியவரான அக்கினோவுக்கு காட்டினார்.

இப் போட்டியில் தோல்வி அடைந்த பெரு, நான்காவது நாடாக முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியானது.

 (என்.வீ.ஏ.)