வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர்.

வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றிலேயே குறிப்பிட்ட 25 மாணவர்களும் மொட்டையடிக்க சென்றுள்ளனர்.

சிகையலங்கார  நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் குறித்த மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை மொட்டையடிக்காமல் பல்கலைக்கழகம் சென்றால் கனிஸ்ட மாணவிகளின் முன்னால் அரை நிர்வாணமாக நிறுத்தி சிரேஸ்ட மாணவர்கள் அடிப்பார்கள் என தெரிவித்த நிலையில் குறித்த சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் மனிதாபிமான அடிப்படையில் 50 ரூபாவிற்கு மொட்டையடித்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கருத்து தெரிவிக்கையில் ,

யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வவுனியா வளாகத்தின் சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை என்ற பெயரில் மனித உரிமை மீறல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகம் வரும் கனிஸ்ட மாணவர்களை பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் மீது வெறுப்புணர்வையே ஏற்படுத்தும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.