(இராஜதுரை ஹஷான்)

எதிர்கால அரசியல் நிலைமையினை எதிர்கொள்ள பலதரப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பதனாலேயே முன்னாள் ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டார் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் தனிப்பட்ட கருத்துக்களை ஒன்றிணைத்து பாரிய சக்தியாக மாற்றியமைப்பதே தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களின் பிரதான நோக்கம் என்பதை அவர்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கும் பொது எதிரணியின் உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்கால அரசியல் நிலைமையினை எதிர்கொள்ள பலதரப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்ற விடயத்தினை சிறந்த அரசியல் இராஜதந்திரம் அறிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்துக் கொண்டுள்ளார் இதன் காரணமாகவே 16 உறுப்பினர்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டுள்ளார் என்றார்.