முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கு நஸ்டஈடு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தால் அரசாங்கத்திற்கு வரிவழங்குவதை நிறுத்துவோம் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையை போன்று வேறுஎந்த நாடும் முன்னாள் பயங்கரவாதிகளிற்கு நஸ்டஈடு வழங்கியது கிடையாது என செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள விமல்வீரவன்ச அரசாங்கத்தின் இந்த முயற்சி நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள பெருந்தலைகளின் பணத்திலிருந்து நஸ்டஈட்டை அரசாங்கம் வழங்கப்போவதில்லை,மீத்தோட்டைமுல்லயில் குப்பை மேடு சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இன்னமும் நஸ்ட ஈட்டை வழங்கவில்லை, என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச ஏன் நாட்டை அழிக்க நினைத்த பயங்கரவாதிகளிற்கு அரசாங்கம் நஸ்;;டஈட்டை வழங்க முயல்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்ஈழத்திற்காக போராடிய பயங்கரவாதிகளிற்கு நஸ்டஈட்டை வழங்க அரசாங்கம் முயன்றால் ஜனாதிபதியையும் பிரதமரையும் நாங்கள் பிரிவினைவாதிகளாகவே கருதவேண்டியிருக்கும் எனவும் விமல்வீரவன்ச  தெரிவித்துள்ளார்.