நாட்டை பொருளாதார ரீதியில் மேலும் வளப்படுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் தார் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற தார் உற்பத்தி அங்குரார்ப்பண நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

'எமது நாடு அபிவிருத்திப் பாதையில் செல்வதால் தார் உற்பத்தியின் கேள்வியும் உயர்வடைந்துள்ளது. இதனால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தார் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னெடுத்துள்ளது. 

தேசிய மற்றும் சிறந்த தரத்திற்கு அமைவாக தாரை உற்பத்தி செய்யவுள்ளது. தாரை கொள்வனவு செய்வதற்கான வெளியில் செல்லும் பெரும் தொகையான பணத்தை இதன்மூலமாக சேமிக்கவும், நிலையான அபிவிருத்திக்கு பயன்படுத்தவும் முடியும். இதுவே எமது நோக்கமாகும்.'

'தார் உற்பத்தி மற்றும் விநியோகம் மூலமாக கூட்டுத்தாபனத்திற்கு இலாபத்தை அதிகரிக்கும் நோக்கமும் உள்ளது. எமது போட்டிச் சந்தையில் நியாயமான விலையில் தாரை விற்பனை செய்யவும் நிறுவனங்களின் கேள்விக்கேற்ப உற்பத்தியை மற்றும் விநியோகம் என்பவற்றை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் முறையான பரிசோதனை, உயர் தொழிநூட்பம் மற்றும் நிபுனத்துவமிக்க குழுவின் உதவியுடனேயே இந்த தார் உற்பத்தியை சர்வதேச தரத்திற்கமைய உற்பத்தி செய்யவுள்ளது. இந்த உற்பத்தி நடவடிக்கை மூலமாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் 15 வீதத்தால் டீசல் உற்பத்தியையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

ஆரம்பமாக 150 மெற்றிக் தொன் தார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இவ்வுற்பத்தியின் மூலம் நாட்டின் 40 சதவீதமான தாரின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எதிர்காலத்தில் சுத்திகரிப்பை மேலும் நவீனமயப்படுத்துவதன் மூலம் நாம் 225 மெட்ரிக் தொன் தாரை உற்பத்தி செய்யக் கூடிய நிலை உருவாகுவதோடு 60 சதவீதமான தேவையை பூர்த்தி செய்யமுடியும் என எதிர்பார்க்கின்றோம். நாங்கள் இந்த உயர் தரத்திலான தாரினை போட்டிச்சந்தையில் அறிமுகப்படுத்தவும் நாட்டின் அபிவிருத்திக்கும் இந்த வேலைத்திட்டம் உதவும் என நம்புகின்றோம்'என்றார்.