(இரோஷா வேலு) 

யுத்த ஆயுத வர்த்தகத்திற்கு ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படல் வேண்டும். இதன் மூலமே நாட்டில் காணப்படும் சட்டவிரோத ஆயுதங்களை கட்டுப்படுத்தல் முடியும். எனவே இது தொடர்பில் சர்வதேச ஆயுதக் களைவுச் சமூகத்துடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட முன்வர வேண்டுமென ஆயுதக் களைவு மற்றும் அபிவிருத்திக்கான மன்றின் ஒருங்கிணைப்பாளர் வித்யா அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

ஆயுதக் களைவு மற்றும் அபிவிருத்திக்கான மன்றினால் இன்று தேசிய நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய நாடுகள் அமைப்பினால்  2014 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 ஆம் திகதி அமுலுக்கு கொண்டுவரப்பட்ட ஆயுதக் களைவுச் சமூகத்துடனான ஒப்பந்தத்தில் இலங்கை இன்றுவரையில் கைச்சாத்திட்டிருக்கவில்லை. இவ்வமைப்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 156 உறுப்பு நாடுகள் இணைந்துள்ளன. இதன் மூலம் பொறுப்புவாய்ந்த ஆயுத வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முடியும். 

30 வருட யுத்தத்தின் பின்னரான இலங்கையில் யுத்த ஆயுத வியாபாரங்களுக்கான ஒழுங்குவிதிக்கள் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் அது இன்று வரையில் நடைபெற்றதாக தெரியவில்லை. எனவே எமது அமைப்பானது துரிதமாக இந்த  யுத்த ஆயுத வியாபராங்களுக்கு ஒழுங்கு விதிகளை கொண்டுவரும் சர்வதேச ஆயுதக் களைவுச் சமூகத்துடன் இலங்கையும் இணைந்து கொள்ளுவதை ஊக்குவிக்கின்றது. 

இலங்கையானது ஆயுத வர்த்தகம் உட்பட பல்வேறுபட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கான பிரதான மையமாக காணப்படுகின்றது. எனவே நாம் சட்ட ரீதியாக பலப்படுத்தப்படல் வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். சட்ட இறுக்கம் காணப்படுமாயின் சட்டவிரோத நடவடிக்கைகள் இலங்கை மேற்கொள்ளப்படல் கட்டுப்படுத்தப்படும். 

இவ்வொப்பந்தம் வாயிலாக கடந்த காலங்களில் விடுதலை புலிகள் அமைப்பு பயன்படுத்தி யுத்த ஆயுதங்கள் குறித்தும், இலங்கைக்கு எவ்வகையில் இவ்வாயுதங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதையும் அறிந்துகொள்ள இயலும். 

மேலும் அண்மையகாலங்களாக இலங்கையில் சட்டவிரோத ஆயுதங்களில் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மனித படுகொலைகள் உட்பட பல்வேறு சட்டவிரோத செயல்கள் இடம்பெறுகின்றன. இதன்காரணமாக மனித பாதிப்புக்களுடன் இயற்கை அழிவுகளுக்கும் இவ்வாயுத பயன்பாடு மேலோங்கி நின்றிகின்றது. சட்டவிரோத மர வெட்டுதலின் போது ஆயுதங்களினை கொண்டு மிரட்டும் கூலிப்படையினரும், விலங்குகள் குறிப்பாக யானை, சிறுத்தை போன்ற விலங்குகளின் மரணத்தின் போது சட்டவிரோத ஆயுத பயன்பாடே காரணமாகும். 

எனவே விரைவில் இவ்வொப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திடுவதன் மூலம் இலங்கையில் காணப்படும் ஆயுதங்கள் எண்ணிக்கை குறித்து அறிந்துகொள்ள முடிவதோடு தெற்காசிய நாடுகளிலே இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்ட முதலாவது நாடாக திகழ முடியும் என்றார்.