'இசை' என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.  சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். இது சிறந்த கலைகளில் ஒன்று. அத்தோடு மனிதர்களை மட்டுமன்றி உயிருள்ள செடி, கொடி, உயிரினங்கள் ஆகிய அனைத்தையும் தன்பக்கம் இழுக்கக்கூடிய சக்தி இசைக்கு மட்டுமே உள்ளதென்றால் அது மிகையாகாது.

இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம்  இசை சம்பந்தமான பல்லாயிரக்கணக்கான காணொளிகள்  பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடதக்கதாகும். 

இந்நிலையில், இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக  ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந் திகதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.