அமெரிக்காவின் இராணுவ பயிற்சி நிலையமொன்றில் புரட்சியாளர் சேகுவேராவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டீசேர்ட் அணிந்திருந்த இராணுவ வீரர் ஒருவர் அமெரிக்க இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

26 வயதுடைய ஸ்பென்சர் ரபோன் எனும் அந்த முன்னாள் இராணுவ வீரர் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மதம் அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்திலுள்ள வெஸ்ட் பொய்ண்ட் இராணுவ பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை முடித்ததன் பின்னர்  'கம்யூனிசம் வெற்றிபெறும்' (communism will win) என்று தனது தொப்பியில் எழுதி அதன் படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

மேலும் மற்றுமோர் புகைப்படத்தில் கியூப புரட்சியாளரான சேகுவேராவின் படம் பொறிக்கப்பட்ட டீசேர்ட்டையும் அணிந்திருந்தார். 

இந் நிலையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலாக கம்யூனிசத்துக்கு ஆதரவாக அவர் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். 

இந் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இது தொடர்பான விசாரணைகளை முடிவடைந்துள்ளதாக கூறியுள்ள இராணுவம், அவர‍ை இராணுவத்திலிருந்து நீக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தான் செய்த செயலுக்கு வருத்தப்படாத ஸ்பென்சர் ரபோன், போர்ட் ட்ரம்ப் ராணுவ குடியிருப்பின் முகப்பின் முன் நின்று, கையின் நடுவிரலை உயர்த்தும் ஆபாசாமான சைகையை படமெடுத்து அப் படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.