(நெவில் அன்தனி)

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் எட்டாம் நாளான இன்றைய தினம் முதல் சுற்றுக்கான மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

“சி” குழுவில் தத்தமது ஆரம்பப் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய முன்னாள் சம்பியன் பிரான்ஸ், டென்மார்க் ஆகிய இரண்டு அணிகளும் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் வகையில் இரண்டாவது வெற்றிக்கு குறிவைத்து விளையாடவுள்ளன.

இதேவேளை, உலகக் கிண்ணத்தில் கன்னிப் பிரவேசம் செய்த ஐஸ்லாந்துடனான “ஜீ ” குழு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட முன்னாள் சம்பியன் ஆர்ஜன்டீனா என்ன விலைகொடுத்தேனும் வெற்றிபெறவேண்டும் என்ற கங்கணத்துடன் தனது இரண்டாவது போட்டியை இன்று எதிர்கொள்ளவுள்ளது.

டென்மார்க் எதிர் அவுஸ்திரேலியா

சமாரா விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் டென்மார்க், அவுஸ்திரேலிய அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளன.

இக் குழுவில் தனது ஆரம்பப் போட்டியில் பெருவை வெற்றிகொண்ட டென்மார்க இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், வெற்றி பெறக்கூடிய அணிகளுக்கு இம்முறை சாதகமான முடிவுகள் கிடைக்காததால் டென்மார்க், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என அனுமாணிப்பது இலகுவானதல்ல. எனவே இந்தப் போட்டி இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்துவதாக அமையும் என எதர்பார்க்கும் அதேவேளை டென்மார்க்கின் வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகின்றது எனக் கூறலாம். 

இதற்கு முன்னர் 3 சிநேகபூர்வ சர்வதேச போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் விளையாடியதில் டென்மார்க் 2 வெற்றிகளையும் அவுஸ்திரேலியா ஒரு வெற்றியையும் ஈட்டியுள்ளன.

பிரான்ஸ் எதிர் பெரு

பிரான்ஸுக்கும் பெருவுக்கும் இடையில் எக்கெத்தரின்பேர்க் விளையாட்டரங்கில் இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மற்றொரு “சி” குழு போட்டி விறுவிறுப்பைத் தோற்றுவிக்கவுள்ளது.

இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கு வெற்றி அவசியம் என்பதால் பிரான்ஸ் அதற்கான வியூகங்களுடன் களம் இறங்கவுள்ளது. அதேவேளை முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பெரு, இன்றைய போட்டியில் கட்டாய வெற்றிக்காக விளையாடவுள்ளது. இதன் காரணமாக இவ்வணி முரட்டுத்தனமான விளையாட்டைப் பிரயோகிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த இரண்டு அணிகளும் சர்வதேச அரங்கில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

அணிகள் நிலை

குழு - சி  வி.போட்    வெற்றி   சமநிலை   தோல்வி    புள்ளிகள் 

பிரான்ஸ் 1          1           0                  0           3       

டென்மார்க்         1          1           0                  0           3       

அவுஸ்திரேலியா         1          0           0                  1           0       

பெரு         1          0           0                  1          0           

 

ஆர்ஜன்டீனா எதிர் குரோஏஷியா

ஆர்ஜன்டீனாவுக்கும் குரோஏஷியாவுக்கும் இடையிலான டி குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டி நிஸ்னி நவ்கோரொட் விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் கன்னிப் பிரவேசம் செய்த ஐஸ்லாந்துடனான போட்டியில் மெசி தவறவிட்ட பெனல்டியியனால் அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள நேரிட்ட ஆர்ஜன்டீனாவுக்கு இன்றைய போட்டி பெரும் தலையிடியைக் கொடுக்கவுள்ளது.

நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியீட்டிய குரோஏஷியா இன்று இரவு ஆர்ஜன்டீனாவுக்கு பலத்த சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆர்ஜன்டீனாவும் குரோஏஷியாவும் சர்வதேச அரங்கில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் ஐந்தாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் விளையாடிய நான்கு போட்டிகளில் .ஆர்ஜன்டீனா இரண்டு தடவைகளும் குரோஏஷியா ஒரு தடவையும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது. எனவே இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. .

அணிகள் நிலை

குழு டி       வி.போட்டி   வெற்றி   சமநிலை   தோல்வி    புள்ளிகள்     

குரோஷியா       1                  1           0               0            3             

ஆர்ஜன்டீனா      1                  0           1               0            1             

ஐஸ்லாந்து      1                  0           1               0            1             

நைஜீரியா      1                  0           0               1            0