ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து  அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

இலங்கை அதிகாரிகளை நேற்று சந்தித்துள்ள அமெரிக்க தூதுவர் அதுல்கெசாப் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் இது குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அதுல்கெசாப் நல்லிணக்கம் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்குமான  நிரந்தர சமாதானம் என்ற நோக்கத்தை முன்னகர்த்துவதற்காக இலங்கை சர்வதேந சமூகத்திற்கான தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை இரு தீர்மானங்களிற்கு இணை அனுசரணை வழங்கியது , என தெரிவித்துள்ள அமெரிக்கா இந்த முக்கியமான தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அர்ப்பணிப்புகள் மற்றும் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து இலங்கை காண்பிக்கும் முன்னேற்றம் இரு நாடுகள் மத்தியிலான உறவை வலுப்படுத்தும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நாங்கள் இலங்கையின் முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிப்போம்,எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.