மக்கள் மத்தியில் காணப்படுகின்ற நோய் எதிர்ப்பு சிகிச்சை முறைகளில் வலி தணிப்பு சிகிச்சை என்ற புதிய மற்றும் பயணுள்ள சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

எம்மில் பலரும் ஆரோக்கியம் என்றால் வலியில்லாமல் இருப்பது தான் என்றும், வலி இருந்தால் நோய் இருக்கிறது என்றும் புரிந்துகொள்கிறார்கள். அதே போல் உடலுக்கு ஏதேனும் ஆரோக்கிய கேடுகள் ஏற்பட்டால் அதனை Curative Care எனப்படும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்திக் கொள்ளும் மருத்துவ நடைமுறையை நாடுகிறார்கள். வேறு சிலர் Preventive Care எனப்படும் வருமுன் காத்துக் கொள்ளும் மருத்துவ எச்சரிக்கையை கடைபிடித்து ஆரோக்கியத்தை பராமரிக்கிறார்கள். ஆனால் எம்மில் யாரும் Palliative Care எனப்படும் வலிதணிப்பு சிகிச்சையைப் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை.

வலி தணிப்பு சிகிச்சை என்றால் முதுமையில் ஆரோக்கிய சவாலுடன் இருப்பவர்களை பராமரிப்பது, கைவிடப்பட்ட புற்று நோயாளிகள் மற்றும் முற்றிய நிலையில் குணப்படுத்த இயலாத புற்றுநோயாளிகள் மற்றும் ஏனைய நோயாளிகள் ஆகியோர் வலியால் துடித்து போவர். இவர்களுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக அளிக்கப்படும் சிகிச்சையே வலி தணிப்பு சிகிச்சை எனப்படுகின்றது.

அதே போல் முதிய நோயாளிகளிடம் அவர்களைத் தாக்கியிருக்கும் நோயின் தன்மையைப் பற்றியும், அதன் தீவிரத்தைப் பற்றியும், அவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க அளிக்கப்படும் சிகிச்சையைப் பற்றியும், அவர்கள் மத நம்பிக்கை, ஆன்மீக நம்பிக்கை, உடலை பற்றிய அவர்களின் நம்பிக்கை ஆகியவற்றை பாதிக்காமல் இந்த சிகிச்சையைப் பற்றி எடுத்துரைப்பதே தான் இதிலுள்ள சவாலான பணியாகும்.

இந்த சிகிச்சையைப் பற்றி இந்தியாவில் இரண்டு சதவீதத்தினர் தான் தெரிந்து வைத்துள்ளனர். ஆகையால் இவ்வகையினதான வலி தணிப்பு சிகிச்சை குறித்து பொது மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வளர்ச்சியடைந்து வரும் அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வலி தணிப்பு சிகிச்சையில் நோயாளிகளை, மரணத்தை பயமில்லாமலும், போதிய மன வலிமையுடனும், வலியில்லாமலும் எதிர்கொள்ள வைப்பது தான் பிரதான பணியாக முன்னிறுத்தப்படுகிறது. அதே போல் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி சத்திர சிகிச்சை மற்றும் ஏனைய தெரபிகளால் ஏற்படும் வலிகளை உணராதிருப்பதற்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே வலி தணிப்பு சிகிச்சையின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். 

டொக்டர் ரிபப்ளிகா சிறிதர்

தொகுப்பு அனுஷா.