(இராஜதுரை ஹஷான்)

சிறை  தண்டனை அனுபவிக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுசெயலாளர் ஞானசார தேரருக்கு சிறையில் எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

 

ஞானசார தேரரின் காவி உடை விவகாரம் தொடர்பில் கோட்டை ஸ்ரீ கல்யாணி தர்ம மஹா சபையின் தலைவர் கெபாடபிடிய ராவுல தேரரினால் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சுக்கு முன்வைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் விடுத்தள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவி உடையினை நீக்கும் அதிகாரம் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளருக்கோ, ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கோ கிடையாது. மாறாக  குறித்த தேரர் உறுப்புரைமை உடைய  சங்க சபைக்கும் பீடத்திற்குமே அதற்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. 

அதேபோன்று மகாநாயக தேரரின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைவாக தேரரின் காவியுடைய நீக்குவது குறித்து பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகத்திற்கு  இயலுமை உள்ளது.

நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பின் போது சிறைக்கு  செல்லும்  எந்தவொரு நபராக  இருந்தாலும் அவர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது சிறைச்சாலை சட்டத்தில் தெளிவாக குறிப்படப்பட்டுள்ளது. 

சிறைச்சாலை சட்டத்தின 106 ஆவது பிரிவின் பிரகாரம் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்படும் எந்தவொரு கைதிகளுக்கும் சீறுடை வழங்கப்பட வேண்டும். 

எனவே சிறை  தண்டனை அனுபவிக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுசெயலாளர் ஞானசார தேரருக்கு சிறையில் எவ்வித சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.