ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண எச் குழுவுக்கான போட்டியில் பொலந்தை முற்றிலும் எதிர்பாராத விதமாக 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் செனகல் வெற்றிகொண்டது.

இதன் மூலம் ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றி ஒன்றைப் பதிவு செய்த முதலாவது ஆபிரிக்க நாடு என்ற பெருமையை செனகல் பெற்றது.

எவ்வாறாயினும் அவ்வணி போட்ட இரண்டாவது கோல் சர்ச்சையை தோற்றுவிப்பதாக அமைந்தது. உபாதைக்குள்ளாகி சிகிச்சை பெற்ற பின்னர் ஆடுகள எல்லைக்கு வெளியே நின்ற எம்பயே நியாங், மத்திய களத்திலிருந்து பரிமாறப்பட்ட பந்தை நோக்கி திடீரென உள்ளே நுழைந்து ஓடி, போலந்து கோல்காப்பாளர் வோஜ்சியெச் ஸெஸ்னியையும் பின்கள வீரர் ஜேன் பெட்நாரெக்கையும் கடந்து சென்று வெற்றுகோலினுள் பந்தை புகுத்தினார்.

இதற்கு போலந்து வீரர்கள் தமது ஆட்சேபத்தை வெளியிட்டபோதிலும் மத்தியஸ்தர் நவாவ் ஷுக்ரல்லா அதனைப் பொருட்படுத்தவில்லை.

மொஸ்கோ, ஸ்பார்ட்னக் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற இப் போட்டியின் 37ஆவது நிமிடத்தில் செனகலுக்கு இனாம் கோல் ஒன்று கிடைத்தது.

செனகல் வீரர் இத்ரிஸ்ஸா குயே உதைத்த பந்து போலந்து வீரர் தியாகோ சியோநெக்கின் பாதத்தில் பட்டு அவரது சொந்த கோலினுள்ளேயே செல்ல செனகல் வீரர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

இதனைத் தொடர்ந்து அடுத்து 8 நிமிடங்களுக்கு ஆட்டத்தில் சுவாரஸ்யம் தென்படவில்லை.

இடைவேளையின் பின்னர் இரண்டு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் விளையாட ஆரம்பித்தனர். போலந்து மூன்று வாய்ப்புகளையும் செனகல் ஒரு வாய்ப்பையும் முறையாகப் பபன்படுத்தத் தவறின.

போட்டியின் 60ஆவது நிமிடத்தில் போலந்தின் கோல்காப்பாளர் மற்றும் பின்கள வீரர் ஒருவர் ஆகியோரைக் கடந்தவாறு பந்தை நகர்த்திச் சென்ற எம்பயே வெறுமனே இருந்த கோலினுள் பந்தை புகுத்தினார். இந்தக் கோல் குறித்தே போலந்து வீரர்கள் தமது ஆட்செபத்தை வெளியிட்டனர்.

தொடர்ந்து போராடிய போலந்து, போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் க்ரிச்சோவியக் மூலம் கோல் போட்டது. அந்த சந்தர்ப்பத்தில் காமில் க்ரொசிக்கி பரிமாறிய பந்தை க்ரிச்சோவியக் தனது தலையால் தட்டி கோலாக்கினார்.

இதனை அடுத்து கோல் நிலையை சமப்படுத்த போலந்து முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போக செனகல் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.