(இராஜதுரை ஹஷான்)

நோக்கங்களை முறியடிக்க அரசாங்கம் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தபால் ஊழிய தொழிற்சங்க கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் தொழில் உரிமைகளை கோரி 09 நாட்களாக 27 தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களில்  பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றும் எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை. 

இந் நிலையிலேயே ஏமாற்றமடைந்த தபால் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்தனர். ஆனால் அரசாங்கம் நிரந்தர தீர்வினை வழங்க காலதாமதத்தினை ஏற்படுத்தியமையின் காரணமாகவே நேற்று போராட்டம் தீவிரமடைந்தது. 

உரிமைகளுக்காக போராடும் ஊழியர்களுக்கு நியாயத்தினை வழங்குவதற்கு பதிலாக அவர்களை பலவந்தமாக சேவைக்கு சமூகமளிக்க கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டால் ஊழியர்களின் பதவிகளை இரத்து செய்வதாகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளது. 

போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களை பதவி நீக்குவது எளிதானதல்ல. அவ்வதிகாரம் தபால்மா அதிபருக்கு கிடையாது. கோரிக்கைகள்  நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இதில் எவ்வித மாற்றங்களும் கிடையாது. நோக்கங்களை முறியடிக்க அரசாங்கம் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் பாரிய எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்தார்.