(இராஜதுரை ஹஷான்)

அரச நிதியினை பல்வேறு வழிமுறைகளில் கொள்ளையடித்தவர்கள் இன்று அபிவிருத்தி தொடர்பிலும்,  நிதி குற்றம் தொடர்பிலும் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவது வேடிக்கையாகவே உள்ளது என அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்ண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஆட்சியில் அதாவது 2005 தொடக்கம் 2014 வரையிலான காலப்பகுதியில் கணிய வள எண்ணெய் இறக்குமதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி, மிக் விமான கொள்வனவு,  உள்ளிட்ட பல வழிமுறைகளில் அரச நிதியினை கொள்ளையடித்தவர்கள். இன்று தேசிய அரசாங்கத்தின் சில குறைப்பாடுகள் தொடர்பில் விமர்சிப்பது வேடிக்கையாகவே உள்ளது.

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற சில மோசடிகளை வைத்துக் கொண்டு முழுமையாக ஆட்சியினை தவறென்று குறிப்பிட முடியாது.  இடம்பெற்ற நிதி மோசடியிற்கு தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த அரசாங்கத்தை போன்று மூடி மறைக்கவில்லை. 

அரசாங்கத்தின் திருத்திக் கொள்ளக்கூடிய குறைகளை பெரிதுப்படுத்தி தங்களை பிரபல்யப்படுத்துபவர்கள் நிதி மோசடி குற்றவாளிகளே ஆவர். எனவே தங்களின் குற்றங்களை மறைக்க அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதை கடந்தகால அரசியல்வாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர் என்றார்.